Tuesday, 28 August 2018

நான் KK என்கின்ற கே.ஆர்.குகேஷ் பேசுகின்றேன்!


சென்னை
29.08.2018

நான் கே.ஆர்.குகேஷ் பேசுகின்றேன்!
என் இனிய சொந்தங்களே, நான் உங்கள் குகேஷ் பேசுகின்றேன்! தமிழ்நாடு இசைவேளாளர் இளைஞர் பேரவையின் தலைவர் என்கிற கோதாவில் பேசவில்லை. அந்த மகுடத்தை எல்லாம் கழட்டி வீசிவிட்டு, நான் எப்போதும் உங்கள் வீடு தேடி வரும் போது எனக்கு என்ன உணவு பிடிக்கும் என்பதை கூட நான் காட்டிக்கொள்ளாமல் இருக்கும் போது மீன் பொடிமாஸ் வச்சுக்கப்பா தம்பிஎன வாஞ்சையுடன் சொல்லும் போது  உங்கள் மகிழ்வுக்காக உண்ணும் உங்கள் தம்பியாகத்தான் பேசுகின்றேன்.
உங்கள் மகனை, மகளை என் மடிமீதமர்த்தி குழந்தைக்கு காது குத்தும் போது, உன் குழந்தை வாயில் சாக்லெட் வைத்து சிரிக்கும் போது நான் மட்டும்  வலிக்க வலிக்க துடிப்பேனே, அந்த தம்பி பேசுகின்றேன்!
உங்கள் வாரிசுகள் கை நிறைய சம்பளமும், பை நிறைய மார்க்குகளும் வாங்கும் போது உனக்கு முன்பாக ஆனந்தக்கண்ணீர் விடும் உன் கொழுந்தனார் குகேஷ் பேசுகிறேன் அத்தாச்சிகளே!
அண்ணன் மகன் ஆஸ்திரேலியே போனான், அண்ணனுக்கு இனி சந்தோஷம் தான் என உன் சந்தோஷத்தை பங்கு போட்ட தம்பி பேசுகின்றேன் அண்ணே!

என் சமுதாயத்தில் யார் முன்னேறினாலும் நானே முன்னேறியதாக மகிழ்வடைந்தேனே அந்த சகோதரன் குகேஷ் பேசுகின்றேன்!
மொத்தத்தில் உங்கள் வீட்டு கடைக்குட்டி சிங்கம்பேசுகின்றேன். எனக்கு அக்கா, தங்கச்சி, மாமா, மச்சான், அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி, அத்தாச்சி
போன்ற என் உறவுகள்
மட்டுமே வேண்டும்
, அவர்கள்
முன்னேற்றம் மட்டுமே போதும் என்னும் நினைவில் வாழும் உங்கள் வீட்டு கடைக்குட்டி சிங்கம்
குகேஷ் பேசுகின்றேன்.

நான் ஒரு கதை சொல்லட்டுமா?

அது எம் ஜி ஆர் ஆண்ட காலம். 1985-86. தமிழகமே போர்களமாக இருந்த காலம். நானெல்லாம் அப்போது சிறுவன். வடமாவட்டங்கள் முழுமையும் அப்போது எங்கும் ரத்த ஆறு தான் ஓடியது. ஒரு ஊரில் இருந்து அடுத்த ஊருக்கு போக பேருந்து கிடையாது. ஏனனில் சாலையில் மரங்கள் வெட்டி போடப்பட்டு வழி அடைக்கப்பட்டு இருந்த நிலை. மாலை ஆறு மணிக்கு பின்னர் யாரும் யார் வீட்டுக்கும் போக முடியாது. அறிவிக்கப்படாத ஊரடங்கு அப்போது அமலில் இருந்தது. பகலில் பள்ளிக்கூடம் போக முடியாது. ஆண்கள் வேலைக்கு போக முடியாது. சாப்பாடு கிடையாது. தமிழகம் தாண்டி டெல்லி பாராளுமன்றத்தில் ராஜீவ்காந்தி பிரதமராக இருக்கும் போது அந்த பிரச்சனை பேசப்பட்டது. எல்லா அரசியல்வாதிகளும் சேர்ந்து வருந்தினார்களே தவிர்த்து தீர்வு என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை.

விஷயம் என்ன தெரியுமா? வன்னியர்கள் போராட்டம். அவர்கள் எதற்காக போராடினார்கள் தெரியுமா? “நாங்கள் 2 கோடி பேர் இருக்கின்றோம். ஆனால் சமுதாயத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கின்றோம். கல்வி, வேலைவாய்ப்புகளில் எங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை. எனவே எங்களுக்கு 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18 சதம் இட ஒதுக்கீடு இருப்பதால் அவர்கள் எங்களை விட வேகமாக முன்னேறி வருகின்றார்கள். ஆனால் பிற்படுத்தப்பட்ட எல்லா சமூகத்துக்கும் சேர்த்து 50 சதம் இட ஒதுக்கீடு என்பதால் மற்ற பிற்படுத்தப்பட்ட இனத்துடன் நாங்கள் போட்டி போட முடியவில்லை. எனவே எங்களுக்கு 20 சதம் தனி இட ஒதுக்கீடு வேண்டும்” - இது தான் அவர்கள் கோரிக்கை. கோரிக்கையில் ஒரு வித நியாயம் இருந்தது. ஆனால் அதை தீர்த்து வைக்கும் வழி தான் எம்.ஜி. ஆர் அவர்களுக்கு தெரியவில்லை.

வன்னிய சகோதரர்கள் வீட்டில் எல்லாம் அழுகுரல். சுமார் 35 உயிர்கள் துப்பாக்கி சூட்டில்  பலியாகின. எங்கும் வேதனை. நம் வீட்டுக்கு பக்கத்தில் எழவு விழுந்து கிடக்கும் போது நாம் என்ன பாயசமா சாப்பிட முடியும்? நாமும் அப்போது அழுதோம். சுமார் 3000 பேர்களுக்கு மேலாக சிறையில். அவர்கள் வீட்டில் பசி, பட்டினி... யாருக்கும் உறக்கம் இல்லை. தமிழ்நாடே சுடுகாடானது.


எல்லாம் முடிந்தது. எம்.ஜி.ஆர் 1987ல்  இறந்தார். ஆனால் வன்னிய சகோதரர்கள்  கேட்ட 20 சதம் கிடைக்கவில்லை. அதிமுக அரசு சிறைக்கு அனுப்பிய அந்த வன்னிய சகோதர்கள் வெளியே வர முடியவில்லை. காலம் ஓடியது. எம்.ஜி.ஆருக்கு பின்னர் அவரது மனைவி ஜானகி அம்மாள் ஆட்சிக்கு வந்து 24 நாட்கள் தமிழகத்தை ஆண்டார். அப்போதும் விடிவு வரவில்லை. பின்னர் ஆளுனர் அலக்ஸாண்டர் ஆண்டார். அப்போது இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு வரவில்லை.

1989ல் மீண்டும் நம் தலைவர் கலைஞர் ஆட்சிக்கு வந்தார். வன்னிய சமூக மக்களை அழைத்தார். பேசினார். மருத்துவர் ராமதாஸ் அவர்களிடையே பேசினார். அப்போது ஒரு கருத்தை தலைவர் கலைஞர் வெளியிட்டார். மருத்துவர் ராமதாஸ் அவர்களும் அந்த கருத்தை ஒத்துக் கொண்டார்.

என்னய்யா மருத்துவரே! நீ உன் உரிமையை கேட்பதிலே இருக்கும் நியாயம் எனக்கு புரியுதுய்யா. கண்டிப்பா 20 சதம் இட ஒதுக்கீடு உன் சமூகத்துக்கு கொடுக்கத்தான் வேண்டும். இதிலே பாரு... உனக்கோ போராட 2 கோடி பேர் உன் சமூகத்தை சார்ந்தவர்கள் இருக்காங்க. ஆனால் என் சமூகம் உன் சமூகத்தை காட்டிலும் மிக மிக மிக எத்தனை மிக வேண்டுமானால் போட்டுக்கலாம். இருப்பதோ நாங்க பத்தாயிரம் குடும்பம் தான். நாங்க உங்க கூட போட்டிக்கு வர முடியாதுய்யா. உன் சமூகத்துக்கும் கூடவே என் சமூகத்துக்கும், அதே போல வேறு சில மிகவும் பின் தங்கிய சமூகத்துக்கும் சேர்த்து 20 சதம் இட ஒதுக்கீடு கொடுத்தா என்ன? என்கிறார்.

மருத்துவர் ராமதாஸ் அவர்களும் ஒத்துக்கொள்கின்றார். பின்னர் பிரச்சனை முடிவுக்கு வருகின்றது. இசைவேளாளர் சமூகத்துக்கும் சேர்த்து 20 சதம் இட ஒதுக்கீடு கல்வி, வேலைவாய்ப்புகளில் .....

நம் சமூகத்துக்கு கலைஞர் என்ன செய்தார்? என சிலர் கேட்பதை நானும் என் காதால் கேட்கின்றேன். இன்றைக்கு நம் சமூகத்தில் ஒரே வீட்டில் எத்தனை பட்டப்படிப்பு படித்தவர்கள் இருக்கின்றார்கள் என்பதை உங்கள் யூகத்துக்கே விடுகின்றேன். வேலை வாய்ப்புகளில் எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டுமா? மாவட்டம் தோறும் இசைப்பள்ளிகள், அதிலே ஆசிரியர்கள் நம் இனம் சார்ந்தவர்கள்...இப்படியாக..இப்படியாக...

கலைஞர் அதை செய்தார், இதை செய்தார், ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டார், திருமண உதவி திட்டம், தாலிக்கு தங்கம், இலவச மின்சாரம், இலவச மருத்துவம், இலவச தொலைக்காட்சி... இப்படி எத்தனை வேண்டுமாகின் அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் அது எல்லாம் 7 கோடி மக்களுக்கும் சேர்த்து தான் தந்தார். நம் சமூகத்துக்கு என்று தனிப்பட்ட முறையில் 20 சதம் இட ஒதுக்கீடு என்பது யாராலும் செய்ய முடியாத சாதனை என்பதை நீங்கள் உணரவில்லையா?

இத்தனைக்கும் அந்த 20 சத இட ஒதுக்கீடு என்பதற்காக வன்னிய சமூகம் இழந்தது சுமார் 35 உயிர்கள் அல்லவா? சுமார் 3000 பேர் சிறைவாசம் அல்லவா? ஓடியது ரத்த ஆறு அல்லவா? வறுமையில் வாடியது பல வன்னிய சகோதரர்கள் குடும்பம் அல்லவா? ஆனால் ஒரு உயிர் இழப்பு இல்லை, ஒரு கைது இல்லை, ஒரு சின்ன பிரச்சனை கூட இல்லை... ஆனால் இசைவேளாளர் சமூகத்துக்கும் அந்த 20 சதம் இட ஒதுக்கீட்டில் லாவகமாக டாக்டர் ராமதாஸ் அவர்கள் ஒப்புதலோடு அதை நமக்கு செய்தாரா இல்லையா நம் கலைஞர்! இது தான் நான் உங்களிடம் கேட்கும் ஒரே கேள்வி!

இதோ... நான் நம் கலைஞர் நம் சமுதாயத்துக்கு செய்த மாபெரும் புரட்சியை உங்களிடம் விவரித்து விட்டேன். கலைஞர் அதற்காக உங்களிடம் ஒரு காலமும் பிரதியுபகாரம் கேட்டதில்லை. இனி கேட்க போவதும் இல்லை. நிம்மதியாய் மெரினாவில் ஓய்வெடுக்க சென்றுவிட்டார். ஆனால் உதவி வாங்கிய நம் சமூகம் அவருக்காக ஒன்றே ஒன்று செய்ய வேண்டாமா?

உங்களிடம் நான் இப்போது கேட்பது மடிப்பிச்சை. இதோ நான் இசைவேளாளர் இளைஞர் பேரவையின் மாநில தலைவர். நாளைக்கே நம் சமுதாயத்துக்கு ஒரு பிரச்சனை எனில் ஒரு போராட்டம் அறிவித்தால் .... அறிவித்தால்... நம் பிரச்சனையை அரசு தீர்க்குமா? அல்லது வன்னிய மக்கள் போல 35 உயிரை எடுக்குமா? 3000 குடும்பத்தை சிறையில் அடைக்குமா? அல்லது எனக்கு அந்த போராட்டத்தை நடத்தி என் சகோதரர்கள், சகோதரிகள், அத்தான், அத்தாச்சி, சித்தப்பா, சித்தி என பலரையும் வதைக்கும் எண்ணம் தான் வருமா?

ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தாமல் நமக்கு 20 சத இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்த மகான் மெரினாவில் உறங்குகின்றார். அவரை நாம் நன்றியோடு இசைத்தாலாட்டு பாடி நிம்மதியாய் உறங்க வைக்க கூட முடியாதா என்ன?

நான் மீண்டும் உங்களிடம் கேட்கும் கோரிக்கை என்பது இது தான். இதோ எதிர்வரும் 01.09.2018 அன்று காலை 9.30 மணிக்கு நம் உறவுகள் எல்லாம் ஒன்று கூடுவோம். சென்னை மெரினாவில் நேப்பியர்
பாலத்திலிருந்து கலைஞர்
ஓய்விடம் வரை நடந்து செல்வோம். இசையால் அஞ்சலி செலுத்துவோம்.
இது அவருக்கான அஞ்சலி என்று நீங்கள் நினைத்தால் அது அஞ்சலி. அல்லது நன்றிக்கடன் என நினைத்தால் அது நன்றிக்கடன்.

கடன் இல்லா பெருவாழ்வு வாழ்வோம்!

எனக்கான, உங்கள் வீட்டு குகேஷ்க்காக இந்த மடிப்பிச்சையை எனக்கு அளித்திடுங்கள்!

என்றும் உங்கள்

கே.ஆர்.குகேஷ்

மாநில தலைவர், இசைவேளாளர் இளைஞர் பேரவை. 9962499488.

TNIVIP 2075/18

No comments:

Post a Comment

TNIVIP புதிய உறுப்பினர்:

SELVI DHARSHINI - KUMBAKONAM *-** (27124)